வகுப்பறையில் மது பாட்டில்களை அடித்து நொறுக்கி விட்டு செல்லும் கஞ்சா கும்பல்..!
காங்கேயம் அரசு பள்ளி வகுப்பறையில் மது பாட்டில்களை உடைத்து போட்டும் ஜன்னல்களை சேதப்படுத்திய போதை ஆசாமிகள் அட்டூழியம் செய்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட திருவிக நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை முடிந்து மாணவர்களை பள்ளியில் விட சென்ற பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
வகுப்பறை கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு வகுப்பறையில் மது பாட்டில்களை உடைத்து வீசப்பட்டும் இருந்துள்ளது. கழிவறை குழாயும் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கஞ்சா மற்றும் மதுபோதையில் இளைஞர்கள் சிலர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அடிக்கடி அந்த இளைஞர்கள் இவ்வாறு செய்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ள பெற்றோர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.






