திங்கள்கிழமை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு..! எவற்றுக்கெல்லாம் அனுமதி..?
வரும் திங்கள்கிழமை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முதலமைச்சர் அறிவித்துள்ளார். முழு ஊரடங்கின் போது மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் மட்டும் செயல்பட அனுமதி.
பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை வினியோகம் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் தோட்டக்கலை துறை மூலமாக சென்னை நகரத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வழங்கப்படும்.
தலைமை செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் எனவும், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், 12:00 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
ஸ்விக்கி, ஜோமட்டோ மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும் . ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும். வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
சரக்கு வாகனங்கள் செல்லவும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும். உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபதிவுடன் அனுமதிக்கப்படும்.
மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இபதிவு தேவையில்லை. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம். அத்தியாவசிய பொருட்கள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படும்.




