முக்கிய வழித்தடங்களில் இன்று முதல் ரயில் போக்குவரத்து தொடக்கம்!
ஊரடங்கு காரணமாக மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து அனைத்து வகையான ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1ம் தேதியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் படிப்படியாக இன்று முதல் ரயில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 15 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முன்பதிவு தொடங்கிய 3 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேர் முன் பதிவு செய்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் பயன்படுத்தியதால் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கிய நிலையில் இரண்டு மணி நேர தாமதத்திற்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கியது. ரயில் பயணம் செய்வதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டும் நோய்த்தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து பயணிகளுக்கும் ரயில் நிலையங்கள் மட்டுமின்றி ரயில் பெட்டிகளிலும் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும் என்று, பயணிகள் சென்றடையும் ரயில் நிலையங்களையும் இதேபோன்று அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.






