திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்களுக்கு நடவடிக்கை குறித்து விளக்கம்..!
திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க மத்திய மற்றும் புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசு அறிவிப்பை எதிர்த்து புதுச்சேரி மாநில மின்துறை ஊழியர்கள் கடந்த 4ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது எஸ்மா சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என முதியால்பேட்டை எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தால் நிவர் புயலால் புதுச்சேரியில் சேதமடைந்த மின்கம்பங்கள், மின் வயர்களை சரிசெய்ய முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையின்போது மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டு இருப்பதாகவும் சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
அதனையடுத்த டிசம்பர் 4ஆம் தேதி முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக பதிலளிக்க துணைநிலை ஆளுநர், புதுச்சேரி தலைமைச் செயலாளர், புதுச்சேரி மின் துறை செயலாளர் மற்றும் மின்துறை தனியார்மயமாக்கல் எதிர்ப்பு குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.







