--- --:--:-- --

இ.பி.எஸ் செப்.16-ம் தேதி டெல்லி பயணம்..!

4

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்க செப்டம்பர் 16-ம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என அ.தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், அ.தி.மு.க.வில் நீடித்து வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 16-ம் தேதி, டெல்லி செல்வது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியை எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இல்லையெனில், தானாகவே அதற்கான பணிகளை மேற்கொள்வேன் என்றும், இதற்காக 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

 

செங்கோட்டையனின் பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான முயற்சியாகக் கருதப்பட்டது. செங்கோட்டையன் தனது எச்சரிக்கையை விடுத்த சில நாட்களுக்குப் பிறகு, ஹரித்துவார் செல்வதாகக் கூறிவிட்டு, டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கட்சியில் பிளவுபட்டுள்ள அனைவரும் மீண்டும் இணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், செங்கோட்டையனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

 

இந்த அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று பதவியேற்றார். அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்க செப்டம்பர் 16-ம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என அ.தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதற்காக, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” பிரசார பயணம் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

 

அதே நேரத்தில், அவரது இந்த பயணம், செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்த பின்னர் நடைபெறுவதால், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. டெல்லியில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Right Menu Icon