டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி..!
ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம்தான் முக்கியம் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என சூளுரைத்துள்ளார். அதிமுகவில் நடக்கும் சலசலப்புக்கு மத்தியில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அதிமுக ஆட்சியை சிலர் கவிழ்க்க முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து ஆட்சியை காப்பாற்றி கொடுத்த மத்திய அரசுக்கு நன்றியோடு இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, பல்வேறு விவகாரங்கள் குறித்து தொண்டர்கள் மத்தியில் மனம் திறந்தார். அதிமுகவை சிலர் அழிக்க பார்ப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை மறைமுகமாக சாடினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியை சிலர் கவிழ்க்க முயன்றதாகக் கூறி ஓ.பன்னீர்செல்வம் மீது விமர்சனங்களை வீசினார். அதிமுகவின் 18 எம்.எல்.ஏ.க்களை கடத்தி சென்றதாக டிடிவி தினகரன் பெயரைக் குறிப்பிடாமல் குற்றம்சாட்டினார். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை இறைவன் மன்னிக்க மாட்டார் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதனிடையே, பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதற்கான காரணத்தையும் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தினார். வானிலை எச்சரிக்கை காரணமாகவே தருமபுரி சுற்றுப்பயண தேதி மாற்றப்பட்டதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, டெல்லி பயணத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என விளக்கம் அளித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆவேச கருத்துகள் ’அதிமுகவில் ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்பதை வெளிப்படுத்துவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.





