நவ.,1 முதல் இ-பாஸ் கட்டாயம்..!
வால்பாறை செல்வதற்கு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், பலர் கோவை மாவட்டம் வால்பாறைக்குச் செல்லத் தொடங்கினர்.
வால்பாறை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள நிலையில், அங்கு செல்வதற்கும் நாளை மறுநாள் முதல் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சனிக்கிழமை முதல், இ-பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே வால்பாறைக்குள் அனுமதிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இ-பாஸ் பெறுவதற்கு https://www.thepass.tn.gov.in/home என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இணைய தளம் மூலம் இ-பாஸ் பெறும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள், ஆழியார் வனத்துறை சோதனை சாவடியிலும், சோலையார் அணை இடதுகரை சோதனை சாவடியிலும் இ-பாஸ் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.





