சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் முடக்கம் எதிரொலி..! 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு?
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க உத்தரவிடப்பட்ட நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படும் என தெரிகிறது.
கொரானா வைரஸ் தாக்கத்தையும் பரவலையும் கட்டுப்படுத்த, இந்த வைரஸ் பாதிப்பு அறிகுறி உறுதி செய்யப்பட்ட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்கி, அங்குள்ள மக்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து அனைத்து பணிகளும் இந்த மாவட்டங்களில் முடங்குகின்றன. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இன்னும் சில பாடங்களின் தேர்வுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த 3 மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுதுவது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் 11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழகம் முழுவதும் ஒத்திவைப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வரும் 27-ந் தேதி முதல் தொடங்குவதாக இருந்த 10-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 14-ந் தேதிக்கு பின்னர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 9-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இந்த வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வு நடத்தாமல் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவும் கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகறது.






