--- --:--:-- --

“திமுகவில் இருந்து கு.க.செல்வம் டிஸ்மிஸ்”!! எம்எல்ஏ பதவியுடன் பாஜகவில் ஐக்கியம்?

fdg

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து அடியோடு கட்டம் கட்டப்பட்டுள்ளார். இதனால் அவர் எம்எல்ஏ என்ற அந்தஸ்துடன் பாஜகவில் இணைவது உறுதியான நிலையில், பாஜகவுக்கும் சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ உள்ளார் என்ற அளவுக்கு அந்தஸ்து கூடவுள்ளது.

 

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் கு.க செல்வம். சென்னையில் திமுகவின் முக்கியப் புள்ளியாக திகழ்ந்த கு.க.செல்வம், கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பிலும் இருந்து வந்தார்.

 

அதிருப்தி

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் மறைந்ததையடுத்து அப்பதவி சீனியரான தமக்கு கிடைக்கும் என கு.க.செல்வம் எதிர் பார்த்தார். ஆனால் கட்சியில் ஜுனியரான சிற்றரசு என்பவருக்கு அப்பதவி கிடைத்தது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் செல்வாக்கால் தமக்கு கிடைக்க வேண்டிய மா.செ.பதவி தட்டிப் பறிக்கப்பட்டதால் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்தார் கு.க.செல்வம்.

 

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் திடீரென சமீபத்தில் டெல்லி சென்ற கு.க.செல்வம், பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்குப் பின் பேட்டியளித்த கு.க. செல்வம், திமுக தலைமை மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், பாஜகவில் சேரவில்லை என்றும் உஷாராக கூறியிருந்தார்.

சஸ்பென்ட்

ஆனால் டெல்லியிலிருந்து திரும்பிய மறுநாள் நேராக பாஜக அலுவலகத்தில் ஆஜரான நிலையில், கு.க. செல்வத்தை உடனடியாக கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்த திமுக தலைமை, உங்களை ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கமும் கேட்டிருந்தது. கட்சிப் பதவியையும் பறித்தது.

 

இந்நிலையில், கட்சித் தலைமைக்கு கு.க.செல்வம் கொடுத்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

பாஜகவில் சேருவது முடிவெடுத்து விட்ட கு.க.செல்வம், திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் கட்சித் தாவல் சட்டத்தின்படி எம்எல்ஏ பதவி பறிபோய்விடும் என்பதாலேயே போக்கு காட்டி வந்தார். கட்சியாக நீக்கட்டும்; அதன் பின் பாஜகவில் சேர்ந்தால் எம்எல்ஏ பதவி தப்பும் என்பது அவரது கணக்காக மட்டுமின்றி பாஜகவின் எண்ணமாகவும் இருந்தது.

பதவியுடன் பாஜகவில் ஐக்கியம்?

தற்போது அந்த எதிர்பார்ப்புப் படியே கு.க.செல்வத்தை திமுக டிஸ்மிஸ் செய்துள்ளது. இதனால் விரைவில் கு.க.செல்வம் பாஜகவில் ஐக்கியமாவதன் மூலம் பாஜகவுக்கும் சட்டசபையில் ஒரு உறுப்பினர் உள்ளார் என்ற அந்தஸ்தும் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon