குற்றம் குற்றமே செய்திக்கு கிடைத்த உடனடி பலன்: கொரோனாவால் வேலை இழந்த கோவை பெண்ணுக்கு கருணையுடன் நிதியுதவி வழங்கிய தருமபுரி திமுக எம்.பி. டாக்டர் .செந்தில்குமார்!!
கொரோனாவால் வேலை இழந்து, பெண் குழந்தையுடன் செய்வதறியாமல் தவிக்கும் கணவனை இழந்த பெண்ணின் அவல நிலை குறித்து நமது குற்றம் குற்றமே இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதனைக் கண்ட தருமபுரி தொகுதி திமுக எம்.பி டாக்டர்.செந்தில்குமார் அப்பெண்ணுக்கு ரூ. 42 ஆயிரம் நிதியுதவி செய்து சுய தொழில் தொடங்க மனிதாபிமானத்துடன் உதவி செய்துள்ளார்.
கோவை லாலி சாலை முனியப்பன் கோவில் வீதியில் வசித்து வருபவர் வத்சலா(49). திருமணமான 11 மாதத்தில், கர்ப்பிணியாக இருக்கும் போதே கணவரை இழந்த வத்சலா, கடந்த 12 ஆண்டுகளாக பெண் குழந்தையை தனி ஒருவராக வீட்டு வேலை செய்து வளர்த்து வருகிறார்.வீட்டு வேலை செய்து இத்தனை ஆண்டுகளாக கண்ணியமாக முன்னெடுத்து வந்த வாழ்க்கையில் இடியாக வந்தது கொரோனா.

வேலை இழந்து கடந்த 5 மாதங்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் வடிக்கும் வத்சலா வாழ்க்கையின் ஒரே பிடிப்பான தனது பெண் குழந்தையை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையும் பாழாகிவிட்டதாக கூறிய வத்சலா,பணம் இல்லாததால் தனியார் பள்ளியில் படித்து வந்த மகளின் படிப்பை தொடர முடியாமல் மாற்று சான்றிதழ் பெற விண்ணப்பித்து விட்டார்.
ஏற்கனவே 5 மாத வாடகை பாக்கி மற்றும் தனியார் நிறுவனத்தில் பெற்றுள்ள மகளிர் குழு கடன்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் தான் என்ன செய்வது எனத் தெரியவில்லை என்றும் , வாழ்வா சாவா என தன் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருப்பதால் மகளுக்கு கல்வி உதவி,மகளிர் குழு கடன்களுக்கு வழிவகை செய்து தன் வாழ்வாதாரத்தை காக்க சுயமாக தொழில் செய்ய அரசு தரப்பில் உதவி கிடைத்தால் தன்னால் இந்த துயரில் இருந்து மீள முடியும் என வேதனையுடன் கூறியிருந்ததை நமது குற்றம் குற்றமே இணையதளத்தில், வத்சலாவின் அவல நிலை குறித்து விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

நிதியுதவி வழங்கிய எம்.பி.,
நாம் வெளியிட்ட இந்த செய்தியால் வத்சலாவுக்கு சற்றே ஆறுதல் கிடைத்துள்ளது. இச்செய்தியைக் கண்ட தருமபுரி மக்களவை தொகுதி திமுக எம்.பி., டாக்டர் .செந்தில்குமார் வத்சலாவுக்கு கருணை உள்ளத்துடன் ரூ.42 ஆயிரம் நிதியுதவி வழங்கி, வீட்டு வாடகை பாக்கி மற்றும் சுயதொழில் தொடங்க உதவி புரிந்துள்ளார்.








