--- --:--:-- --

கொரோனா பாதிப்புக்கு அகல் விளக்கு ஏற்றுவதால் அறிவியல் பூர்வ நன்மை உண்டா..? மோடி நாட்டின் பிரதமரா? ஆர்.எஸ்.எஸ்.தலைவரா? திருப்பூர் எம்.பி சுப்பராயன் கேள்வி!!

dsg

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மின்விளக்கை அணைத்து விட்டு அகல் விளக்கை ஏற்றுவதால் அறிவியல்பூர்வ நன்மை உண்டா? என்பதை பிரதமர் விளக்க வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் போல் செயல்படாமல், நாட்டின் பிரதமராக மோடி செயல்பட வேண்டும் எனவும் திருப்பூர் எம்.பி., சுப்பராயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவிலும் தற்போது தன் கோரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இன்று 10-வது நாளாக தொடர்கிறது .

 

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக பிரதமர் மோடி ஏற்கனவே இரண்டு முறை நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார். முதல் முறை உரையின் போது, கொரோனா நம் நாட்டிலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தாது என்று வெறுமனே எண்ணிவிடக் கூடாது. இதற்கு மருந்து இல்லை. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க, மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடி, அதற்கு பரீட்சார்த்த முயற்சியாக மக்களே ஒரு நாள் முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.அத்துடன் அன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் விடுகளின் முன் நின்று, கொரோனாவுக்கு எதிராக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு நன்றியையும், அன்பையும் வெளிப்படுத்த கைதட்டி, மணியோசை எழுப்பி உற்சாகப்படுத்தவும் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.

 

இந்த மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக கடைப்பிடிக்க 2 நாட்கள் கழித்து மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் நாட்டு மக்களின் ஒவ்வொரு உயிரும் அவசியம் என்று கூறி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ஒட்டுமொத்த தேசத்தின் இயக்கமும் நின்று போனது போல, நாடே வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஏழை மக்களின் பாடுதான் பெரும் திண்டாட்டமாக உள்ளது.

 

இந்நிலையில், பிரதமர் மோடி 3-வது முறையாக நாட்டு மக்களிடம் இன்று காலை 9 மணிக்கு உரையாடப் போகிறார் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, வீடியோ செய்தி மூலம் மக்களிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளப் போவதாக கூறியிருந்தார். இதனால் பிரதமர் மோடி மீண்டும் என்ன மாதிரியான அதிரடி உத்தரவை வெளிப்படுத்தப் போகிறாரே? என நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

 

ஆனால், இன்று உரையாற்றிய பிரதமர் மோடியோ, கொராேனாவுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக பெருமிதம் கொண்டார். அத்துடன் ஊரடங்கு உத்தரவுக்கு நாட்டு மக்களின் பூரண ஒத்துழைப்புக்கு நன்றி கூறினார்.

 

கடைசியாக, கொரோனாவுக்கு எதிரான போரில் நம் நாட்டு மக்களின் ஒற்றுமையை உணர்த்தும் விதமாக, வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்களுக்கு அணைத்து விட்டு, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது மொபைல் போன் டார்ச் லைட்டுகளால் ஒளிவெள்ளம் பாய்ச்சு ஒளியேற்றுமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

 

கொரானாவுக்கு எதிரான நடவடிக்கையில், முக்கிய அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மின் விளக்கை அணைத்து விட்டு, அகல் விளக்கு, மெழுகுவர்த்தியால் தீபமேற்றுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தொகுதி எம்.பி.யான சுப்பராயன், பிரதமரின் இந்த அழைப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.கொரோனா வைரஸ் நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்கை ஏற்றுவதால் அறிவியல்பூர்வ நன்மையோ, காரணமோ உண்டா? என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் அல்ல; அரசியல் அமைப்பு சட்டத்தை காக்கவேண்டிய பிரதமர் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டியவர் என்று சுப்பராயன் விமர்சனம் செய்துள்ளார்.

 

இன்றைய உரையில் ஏழைகளுக்கான வாழ்வாதாரத்திற்கு புதிய அறிவிப்புகள் வெளியிடுவீர்கள் என எதிர்பார்த்திருந்தோம். ஒளியேற்ற கூறும் பிரதமர், கொரோனாவை எதிர்கொள்ள பொருளாதார நிபுணர்கள், தொற்றுநோயியல் துறை நிபுணர்களின் ஆலோசனையையும் கேட்க வேண்டும் என பிரதமர் மோடியை சாடியுள்ளார்.இது போல் பிரதமர் மோடி இன்று தமது உரையில், மின் விளக்கை அணைத்து விட்டு, தீப ஒளியேற்றுங்கள் என்று கூறியிருப்பதற்கு பல தரப்பிலும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரமும் மோடியின் கருத்தை விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon