6 கண்டங்களையும் பாதித்த கொரோனா வைரஸ்
சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக கொரொனா வைரசின் பாதிப்பு படிப்படியாக கட்டுக்குள் வரும் நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சீனாவின் அண்டை நாடான தென் கொரியாவில் 1,261 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தென்கொரிய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் வைரஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 139 ஆக இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது .இத்தாலியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரொனாவால் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அந்நாடு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா கண்டங்களில் மட்டுமே பரவியிருந்த கொரொனா வைரஸ் தென் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும், அல்ஜீரியா மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும் பரவியதையடுத்து அண்டார்டிகா இல்லாத ஆறு கண்டங்களிலும் பரவிய நோயாக பார்க்கப்படுகிறது.
சீனாவில் உகான் நகரில் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸின் தாக்குதலுக்கு அந்நாட்டில் மட்டும் 2,715 பேரும் ஏனைய நாடுகளில் 55 பேரும் என 2,770 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 81 ஆயிரத்து 296 பேர் கொரொனா பாதிப்புக்குள்ளாக இருக்கும் நிலையில் இவர்களில் 8 ஆயிரத்து 867 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.






