--- --:--:-- --

கோவை : அம்மாசை கொலை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி பரபரப்பு தீர்ப்பு !!!

6.1

கோவை சுந்தராபுரம் சிட்கோ குறிச்சி வீட்டுவசதி பிரிவை சேர்ந்தவர் ராஜவேல் ( 52), பிரபல வழக்கறிஞர். இவருடைய மனைவி மோகனா (47). இவரும் வழக்கறிஞர் ஆவார். இவர் ஒடிசா மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.12 கோடி மோசடி செய்து தலைமறைவானார்.

 

இந்த மோசடி வழக்கை முடிவுக்கு கொண்டு வர ராஜவேல் ஒரு திட்டத்தை வகுத்தார். அதாவது தனது அலுவலகத்துக்கு வழக்கு தொடர்பாக வந்த கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மனைவி அம்மாசை (45) என்ற அப்பாவி பெண்ணை கொன்று,மாநகராட்சி மயானத்தில் எரித்துவிட்டு, தனது மனைவி இறந்துவிட்டதாக இறப்புச்சான்றிதழ் வாங்கி ஒடிசா போலீசாருக்கு அனுப்பி வைத்தார். இதனால் போலீசார் இந்த மோசடி வழக்கை முடித்து வைத்தனர்.

 

இந்த நிலையில் திடீரென்று தனது மனைவி இறக்கவில்லை, தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கிவிட்டனர் என்பதால்,அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றிதழ் விண்ணப்பித்து பெற்றார். இது குறித்து அதிகாரி ஒருவர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் ராஜவேல் தனது மனைவி மீது உள்ள மோசடி வழக்கை முடிப்பதற்காக கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி அம்மாசை என்ற அப்பாவி பெண்ணை கொன்று ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் ராஜவேல்,அவருடைய மனைவி மோகனா மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த பொன்ராஜ் (47), பழனிசாமி (45) ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்தனர்.

 

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு கோவை 5-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில், அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 30-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி முகமது பாரூக் அறிவித்து இருந்தார்.

 

அதன்படி இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கறிஞர் ராஜவேலு, அவரது மனைவி மோகனா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பழனிச்சாமிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும், கொலை செய்யப்பட்ட அம்மாசை குடும்ப திற்க்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பிற்காக கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Reply

Right Menu Icon