கோவை : 5 வயது ஊனமுற்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.டிரைவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை.கோவை போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!!
கோவையில் 5 வயது ஊனமுற்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை வழங்கி கோவை போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை கே.கே.புதூர் பகுதியை சேர்ந்த பாலன் (51).சொந்தமாக வேன் வைத்து இயக்கி வருகிறார்.தனது வேனில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.
தனது வேனில் வந்த 5 வயது காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தையை 3 மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார்.குழந்தை உடல் ரீதியாக பாதிக்கப்பட்டதை அடுத்து சோதனை செய்த பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்த குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்ட பாலனுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை அனுபவிக்கவும்,அத்துடன் வழக்கின் ஒவ்வொரு உட்பிரிவுகளுக்கும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,வாகனத்தை அரசிடம் ஒப்படைத்து அதில் வரும் தொகையையும்,அபராதத்தையும் சேர்த்து பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசால் வழங்கப்படும் ரூ.5 லட்சத்தையும் சேர்த்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஊனமுற்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவருக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் கோவையில் மக்களிடையே மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.






