சான்றிதழ் பெற லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர்!
உறவின் முறை சான்றிதழ் வழங்குவதற்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற சென்னை மயிலாப்பூர் வட்டாட்சியர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
மந்தைவெளியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது உறவினர் ஜெகதீஸ்வரிக்கு உறவுமுறை சான்றிதழ் கேட்டு மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்காக ரவிச்சந்திரனிடம் வட்டாட்சியர் சுப்பிரமணி 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
அவ்வளவு பணம் தர முடியாது என ரவிச்சந்திரன் கூற இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேரம் பத்தாயிரம் ரூபாயில் நிறைவடைந்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக 5 ஆயிரம் ரூபாயை மட்டுமே ரவிச்சந்திரன் கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி 5 ஆயிரம் ரூபாயை மேசையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு ரவிச்சந்திரன் தகவல் கொடுத்திருக்கிறார். அவர்களின் ஆலோசனைப்படி ரசாயன பொருள் தடவிய ரூபாய் நோட்டுகளை மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து சுப்பிரமணியனிடம் ரவிசந்திரன் கொடுத்திருக்கிறார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் வட்டாட்சியர் சுப்பிரமணியை கைது செய்தனர். அவர் அறையில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.





