கமல் வீட்டில் கொரோனா தொற்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியதால் பெரும் சர்ச்சை.. தவறு நடந்து விட்டதாக மாநகராட்சி விளக்கம்!!
சென்னையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சிக் தலைவருமான கமலஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தின் வாசலில், கொரோனா தொற்று உள்ளவர் இருக்கும் வீடு என்ற வாசகம் அடங்கிய எச்சரிக்கை ஸ்டிக்கரை மாநகராட்சியினர் தவறுதலாக ஒட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி, ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பெரிய அளவில் இந்தத் தொற்று பரவி விடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒட்டுமொத்த மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் மூலமே இந்த வைரஸ் தொற்று பரவி வருவது உறுதியாகியுள்ளது. இதனால் கடந்த ஜனவரி மாதம் இறுதி முதல் இந்தியாவுக்கு வந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை கண்டறியும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பட்டியலுடன் அவர்களின் வீடு தேடிச் சென்று கொரோனா பரிசோதனை நடத்துவதுடன், அவர்களை தனிமைப்படுத்தும் விதமாக வீடுகளின் முன், இந்த வீட்டில் வசிப்போர்க்கு கொரோனா தொற்று அறிகுறி இருக்கலாம் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ஸ்டிக்கர்களையும் அதிகாரிகள் ஒட்டுகின்றனர்.

அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டின் முன்பு மாநகராட்சி சார்பில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் கமலஹாசனுக்கு கொரோனா அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று செய்தி வெளியாகி பரபரப்பானது.
ஆனால் அந்த வீட்டில் கமலஹாசன் வசிக்கவில்லை; கட்சி அலுவலகம் தான் செயல்படுகிறது என்று கூறி
மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். கமல்ஹாசனிடமே தெரிவிக்காமல் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது அதிர்ச்சி அளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாக முரளி அப்பாஸ் புகார் செய்தார். இதனால் இந்த நோட்டீஸ் விவகாரம் சர்ச்சையானதால், மாநகராட்சி அதிகாரிகள் திடீரென நோட்டீஸை அகற்றினர்.

தொடர்ந்து கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கமலின் பழைய முகவரி எனத் தெரியாமல் பாஸ்போர்ட் முகவரியைக் கொண்டு நோட்டீஸ் ஒட்டினர். முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் சிறிய தவறு நடந்திருக்கலாம். கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதில் சிறிய தவறு நடந்துவிட்டது. இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கமலஹாசனும் அவருடைய இரு மகள்களான ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய மூவரும் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்ததும், கொரோனா சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக்க தமது இல்லத்தை வழங்க தயார் என்றும் கமல் சமீபத்தில் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.







