தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்த நிலையில் தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று இரவு பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருப்பத்தூர், மதகுபட்டி, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்த கன மழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து மிதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






