தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் கடலோர மாவட்டங்களிலும், தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி 24ஆம் தேதி புயலாகவும் வலுவடைந்து ஒடிசா, பங்களாதேஷ் அருகே 26 ஆம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.






