ரூ. 4 லட்சம் லஞ்சம்… திருப்பூர் பெண் அதிகாரி உள்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ!
திருப்பூரில், ரூ 4 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில், ஈபிஎப்ஓ பிராந்திய பெண் அமலாக்க அதிகாரி உள்ளிட்ட மூன்று பேரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது சிறையில் அடைத்தனர்.
திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து, பி.எஃப். சட்ட விதி மீறல் தொடர்பான பிரச்சினைகளை சரிகட்டுவதற்காக திருப்பூரின் ஈ.பி.எஃப்.ஓ அமலாக்க அதிகாரி லஞ்சம் கோருவதாக சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் இரு அதிகாரிகளையும் பிடித்து சிபிஐ விசாரித்தது. அப்போது, அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, திருப்பூர் ஈபிஎப் அமலாக்க அதிகாரியின் அலுவலக அறையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத சுமார் நான்கு லட்சம் ரொக்கம் அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஐந்து இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன் முடிவில், திருப்பூரில் பணி புரியும் ஈபிஎப்ஓ அமலாக்க அதிகாரி லோகநாயகி மற்றும் சென்னையைச் சேர்ந்த தனியார் ஆலோசனை நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் என, மொத்தம் மூன்று பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
இந்த சோதனைகளில் ரூ 6.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. சிபிஐ சோதனையில், ஆவணங்களும் சிக்கின. கைது செய்யப்பட்ட மூவரும் கோவை சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.






