திடீரென தீப்பற்றிய கார்..! காருடன் சேர்ந்து ஓட்டுநரும் உடல் கருகி உயிரிழப்பு..!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் புறவழி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் காரிலிருந்து வெளியேற முடியாமல் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.
வேப்பூரிலிருந்து கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் விருத்தாச்சலம் மணவாள நகர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்கிய நிலையில் திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது. சில நொடிகளில் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
உடனடியாக காரை ஓரம் கட்டிய ஓட்டுனர் அதிலிருந்து இறங்க முயற்சித்துள்ளார். ஆனால் சீட் பெல்ட்டை கழற்ற முடியாமல் காரின் கதவுகளை திறக்க முடியாமல் போகவே காருடன் அவர் எரிந்து கருகி பலியானார்.
கார் எரிந்து கொண்டிருப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றும் காரின் கதவுகளை திறக்க முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. காரில் வந்தவர் யார், கார் எப்படி தீ பிடித்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.






