நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம்!
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் 2022ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதன்படி, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இதற்காக சென்னை வந்த பகவந்த் மானை திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர். செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டத்தை தொடங்க இருப்பதாகவும் அவர் கூறினார்.





