மதுரையில் நடைபெற்ற பிரியாணி திருவிழா!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முனியாண்டி கோவிலில் நடைபெற்ற மெகா பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி, முனியாண்டி சுவாமி கோவிலில் 85வது ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்திவரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வர். இதனையொட்டி நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பெண்கள் தேங்காய், பழம், பூ, தட்டுகளை தலையில் சுமந்தபடி கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்தனர்.
விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் முநூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு கோவில் வளாகத்திலேயே பிரியாணி சமைக்கப்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த கிராம மக்களுக்கு அசைவ பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது.
இதனை பெற்றிட மக்கள் போட்டி போட்டு பிரியாணியை பெற முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி பிரியாணி விநியோகம் செய்ய உதவினார். பிரியாணி அன்னதானத்தில் கள்ளிக்குடி ,வில்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.






