--- --:--:-- --

ஐ.ஐ.டி பாலக்காடு வளாகத்தில் மாணவி மீது தாக்குதல்..!

7

பாலக்காடு கஞ்சிக்கோடு ஐ.ஐ.டி வளாகத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், அய்யந்திருமாளிகை, ஜட்ஜ் ரோடு, பரமன் நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவி, வளாகத்தில் உள்ள ஏ.பி.ஜே பிளாக்கிலிருந்து தனது விடுதியை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது அலுமினி பார்க் அருகே வைத்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் மரப்பலகையால் அந்த மாணவியின் தலையில் தாக்கியதில், அவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக பாலக்காடு கசபா போலீசார் பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்துதல் (பிரிவு 118(2)), கொலை முயற்சி (பிரிவு 109(1)) மற்றும் அத்துமீறி தடுத்தல் (பிரிவு 126(2)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

 

இது குறித்து ஐ.ஐ.டி பாலக்காடு ஊடகப் பிரிவு தெரிவிக்கையில், “தாக்குதலுக்கு உள்ளான மாணவியால் தன்னைத் தாக்கிய நபர்களை அடையாளம் காண முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரி இயக்குனர், ஆலோசகர் மற்றும் இதர பணியாளர்கள் அடங்கிய குழுவினர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் முடிவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளது.

Right Menu Icon