--- --:--:-- --

அத்திக்கடவு அவிநாசி திட்டம் காணொலி காட்சி மூலம் தொடக்கம்..!

2

 தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 1045 குளம், குட்டைகள் நீர் நிரம்பும் வகையில் ரூ.1916.41 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை துவக்கி வைத்தார்.

 

இதை தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள அத்திக்கடவு அவிநாசி திட்ட நீரேற்று நிலையத்தில் நடைபெற்ற காணொலிக் காட்சி நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். அத்திக்கடவு அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 நீர்வளத்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் என மொத்தம் 1045 குளம், குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இத்திட்டமானது ரூ.1916.417 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் தேவைகள் பூர்த்தியாகும். தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர், துறை உயர் அலுவலர்களுடன் ஆலேசானை மேற்கொண்டு, நேரடியாக விவசாயிகளிடம் நிலைமையை எடுத்துக்கூறி, விரைவாக அந்த பணிகளை துவக்குவதற்கான ஏற்பாடு செய்திட உத்தரவிட்டார்.

 

அதனைத் தொடர்ந்து, விசாயிகளிடம் நேரடியாக பேசி நிலம் கையகப்படுத்தப்பட்டது. விவசாயிகள் மிகுந்த அக்கறையோடும். பெருந்தன்மையோடும் நிலத்தினை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து பணிகள் உடனடியாக துவங்கப்பட்டது. பணிகள் துவங்கப்பட்ட 4 மாத காலத்தில் விடுபட்ட பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து உபரிநீர் கிடைத்தவுடன் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 1045 குளங்களில் சில குளங்கள் தவிர அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் சென்றுள்ளது. துறை அலுவலர்களுடன் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, அவர்களிடம் அறிக்கை பெற்ற பின்பு இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

அத்திகடவு அவிநாசி திட்டத்திற்கு உபரிநீர் மட்டுமல்லாது. எல்பிபி வாய்க்காலில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரின் மூலம் கிடைக்கும் கசிவு நீர் இதற்கு பெரும் உதவியாக இருக்கும். தொடர்ந்து 70 நாட்களுக்கு ஒன்றரை டிஎம்சி தண்ணீர் வழங்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

இந்த திட்டத்தினால், மற்ற விவசாயிகளின் பாசன உரிமைகள் பாதிக்கப்படாது என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான பட்டியல் தயாரித்து நிதி ஒதுக்கீட்டுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

சில தினங்களில் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து இத்திட்டத்தினை ஒவ்வொரு நாளும் கண்காணித்து, நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.”

 

இந்நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), .ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), ஈரோடு மாநகராட்சி மேயர் .சு.நாகரத்தினம், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தா.கிறிஸ்துராஜ், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், தலைமைப்பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை) கோயம்புத்தூர் மண்டலம் .எஸ்.முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் (சிறப்புத்திட்ட வட்டம், அவிநாசி.) எஸ்.திருமலைக்குமார் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொடர்புடைய துறை அலுவலர்கள், விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Right Menu Icon