--- --:--:-- --

மூத்த செய்தியாளர் அன்பழகன் கைது விவகாரம் : புத்தக கண்காட்சி நடத்தும் அமைப்பில் வெடித்தது மோதல்!!

5

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் மூத்த செய்தியாளரும் புத்தக வெளியீட்டாளருமான அன்பழகன், அரசுக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்த புத்தகம் விற்பனை செய்ததால் அவர் அமைத்திருந்த அரங்கம் காலி செய்யப்பட்டது.

 

அன்பழகனும் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அன்பழகனை கைது செய்ததற்கும் புத்தகக் கண்காட்சியில் இருந்து அரங்கை காலி செய்து வெளியேற்றியதற்கும் பெரும் கண்டனங்கள் எழுந்தன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட அரசியல் தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும், புத்தக ஆர்வலர்களும், செய்தியாளர் சங்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

 

இந்நிலையில் இந்தப் புத்தகக் கண்காட்சியை நடத்தும் பப்பாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திலேயே இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுதொடர்பாக பப்பாசி சங்கத்தின் துணைத் தலைவரான நாகராஜன், சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசுக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட புத்தகத்தை விற்பனை செய்வது தவறா? என்று கேள்வி எழுப்பியதுடன் புத்தக கண்காட்சியில் இருந்து அன்பழகனுக்கு ஒதுக்கப்பட்ட அரங்கை காலி செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பப்பாசி சங்கத்தின் துணைத்தால வர் நாகராஜன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 43 -வது புத்தகக் கண்காட்சியிலிருந்து ஒரு பங்கெடுப்பாளரை, அவர் அரசுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான நூல்களை விற்பனைக்கு வைத்துள்ளார் என்பதைக் காரணமாய்க் கூறி அவருக்கு கடிதம் அளிக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

 

இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை ஏற்புடையதல்ல. புத்தகங்களைத் தடைசெய்வது என்பதே இந்த ஜனநாயக யுகத்தில் ஏற்புடையதல்ல. என்றாலும் பப்பாசியின் விதிமுறைகளின்படி அரசாங்கத்தால் சட்டப்படி தடை செய்யப்பட்ட புத்தகங்களை புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யக் கூடாது என்பதே பங்கு பெறும் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள ஷரத்து ஆகும்.

 

எனவே அரசுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான கருத்துகள் கொண்ட புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது என்பது ஏற்புடையதல்ல. அத்தோடு, இது போன்ற அடிப்படையான கொள்கை மற்றும் உரிமைப் பிரச்சனையில் முழுமையான நிர்வாகக் குழுவைக் கூட்டியே முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என நாகராஜன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

இதனால் புத்தகக் கண்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திலேயே விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபமாக வெடிக்கும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon