டிடிவி தினகரனை சந்தித்து ஒரு மணி நேரம் பேசிய அண்ணாமலை!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரில் இருந்து மாற்றினால் கூட்டணியில் இணைவோம் எனக் கூறியிருந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை முறித்துக்கொண்டது.
அதன் பின் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக – பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி இருந்து வருகிறது. இதில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பகிரங்கமாக அறிவித்துவிட்டன.
அதேசமயம், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்றும், அவரை மாற்றினால் மீண்டும் கூட்டணியில் இணைவோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்தவரை தமிழ்நாட்டில் கூட்டணி சிறப்பாக வழி நடத்தப்பட்டதாகவும், நயினார் நாகேந்திரன் நியமனத்திற்கு பிறகு அது சரி இல்லை எனும் ரீதியிலும் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகிய இருவருமே ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு அண்ணாமலை நேரில் வந்து அவருடன் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேறியது, முதல்வர் வேட்பாளரை மாற்றச் சொன்னது, இருவரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தலைவர்கள் சொன்னது என அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு பிறகு இந்தச் சந்திப்பு நடந்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் கவனம் பெற்றுள்ளது.






