--- --:--:-- --

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

3

ங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், இன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்காலில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் நேமூரில் 12 செ.மீ. மழையும் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் 11 செ.மீ., ஆரணியில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை. எனினும், அநேக இடங்களில் இயல்பை விட 1-2° செல்சியஸ் வெப்பம் உயர்ந்துள்ளது. பாளையங் கோட்டையில் அதிகபட்சமாக 38° செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
கரூர் பரமத்தியில் குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

 

அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: இன்று (செப்டம்பர் 22) வடகிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும்.
இன்று (செப். 22): தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும். செப். 23, 24, 25: வடதமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப். 26, 27, 28: தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று (செப். 22): சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

 

நாளை (செப். 23): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கும். இன்று முதல் செப்டம்பர் 26 வரை, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

 

வங்கக்கடல் பகுதிகள்: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நாட்களில் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அரபிக்கடல் பகுதிகள்: தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon