நடிகை ராதிகா தாயார் கீதா மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகா, நிரோஷாவின் தாயுமான கீதா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் ராதிகா, ராதா ரவி, நிரோஷா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். நடிகர் எம்.ஆர்.ராதாவின் மூன்றாவது மனைவி கீதா. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) மாலை உயிரிழந்தார். 86 வயதான கீதா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அவரது உடல் போயஸ் கார்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கீதா உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபு, நாசர் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்கு இன்று மாலை 4.30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கீதா உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அத்துடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் ராதிகா, நிரோஷா மற்றும் ராதா ரவி ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவுக்கு 3 மனைவிகள். அதில் மூன்றாவது மனைவி கீதா. இவரது மகள்கள் தான் நடிகை ராதிகாவும், நிரோஷாவும். இரண்டாவது மனைவியான தனலக்ஷிமியின் மகன் தான் ராதா ரவி என்பது குறிப்பிடத்தக்கது.






