அண்ணா பல்கலைகழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை ..!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று அரசு சார்பில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஆலோசிக்க அமைச்சர்கள் கேபி அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகிய ஐவர் குழு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்த குழு தற்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே நிதி பற்றாக்குறையில் இருப்பதாகவும் உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
துணை வேந்தர் சூரப்பாவின் ஆலோசனைகளை ஏற்புடையதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டது போல் பல்கலைக்கழகமே தேவையான நிதியை சுயமாக திரட்டிக் கொள்ள இயலாது எனவும் அமைச்சர் குழு தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக எழுதிய கடிதத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தால் ஆண்டுக்கு சுமார் 300 கோடி ரூபாய் சுயமாக திரட்ட முடியும் என்றும் எனவே உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் கல்வி கட்டணம் உயர கூடும் எனவும் எதிர்ப்புகள் எழுந்தன.






