கொரொனாவால் மரணத்தை தொட்டுவிட்டு மீண்டு வந்த முதிய தம்பதி!
கேரளாவில் கொரொனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 93 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பூரண குணமடைந்தது இதில் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த 93 வயது தாமஸ் மற்றும் அவரது 88 வயது மனைவி மேரி அம்மாள் ஆகியோருக்கு கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் இருவருக்கும் இத்தாலியில் இருந்து திரும்பிய மகன், மருமகள் மற்றும் பேரனிடம் இருந்து வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் உடல்நிலை மோசமடைந்து நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வைரஸின் பிடியில் இருந்து வெற்றிகரமாக மீட்டனர்.
இதற்கிடையே தம்பதிக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியருக்கு வைரஸ் தொற்று இருந்தது. இந்நிலையில் வயதான தம்பதி இத்தாலியில் இருந்து திரும்பிய அவர்களது குடும்பத்தினர், சிகிச்சை அளித்த செவிலி ஆகிய அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தம்பதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவினரை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
கொரொனா குறித்து தொடர்ந்து அச்சுறுத்தும் தகவல்கள் வந்து கொண்டுள்ள நிலையில் 93 வயது முதியவரும் அவரது 88 வயது மனைவியும் கொரொனாவின் பிடியிலிருந்து மீண்டு உள்ளது நம்பிக்கையளிக்கும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது.






