ஜன 4-ல் அமித் ஷா வருகை..!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யவும், கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகம் அளிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஜனவரி 4 மற்றும் 5-ம் தேதிகளில் திருச்சி மற்றும் புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ளார்.
ஜனவரி 4 (புதுக்கோட்டை): திருச்சி வரும் அமித் ஷா, அன்று மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற மாநில அளவிலான யாத்திரையின் நிறைவு விழாவாக இந்தக்கூட்டம் அமைகிறது.
ஜனவரி 5 (திருச்சி): அன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து திருச்சியில் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். இதில் சுமார் 1,000 பெண்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த விஜயத்தின் போது, தமிழக பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்று, தேர்தல் தயார்நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யவுள்ளார். தமிழக பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜனவரி முதல் வாரத்தில் தமிழகம் வர வாய்ப்புள்ளது.
பியூஷ் கோயல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் தே.ஜ.கூட்டணி (NDA) கட்சிகளான த.மா.கா (ஜி.கே.வாசன்), புதிய தமிழகம் (டாக்டர் கிருஷ்ணசாமி), ஐ.ஜே.கே (பாரிவேந்தர்) ஆகிய கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து முதற்கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 தேர்தலில் கூட்டணியில் இருந்த தேமுதிக மற்றும் பாமக ஆகியவை இதுவரை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அவர்களுடனும் பியூஷ் கோயல் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேமுதிக தனது முடிவை ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்பதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் ஜனவரி 9-ம் தேதி நிறைவடையவிருந்த நயினார் நாகேந்திரனின் யாத்திரை, அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு ஜனவரி 4-ம் தேதியே நிறைவு பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பலமான கூட்டணியை அமைத்து தேர்தலைச் சந்திக்க பா.ஜ.க தலைமை இப்போதே தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது இந்த வருகையின் மூலம் உறுதியாகிறது.





