ஜனவரி 9ஆம் தேதி அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்..!
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 9ஆம் தேதி நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். இந்த சூழலில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பொதுக்குழு கூடி தீர்மானம் நிறைவேற் றாமல் அவர் பரப்புரையை தொடங்கியதாக சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 9ஆம் தேதி சென்னை மாநகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் காலை 8.50 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக பங்கேற்கும் அதிமுகவின் பரப்புரை கூட்டம் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






