6வது இடத்திற்கு முன்னேறிய ரிலையன்ஸ் – சந்தை மதிப்பு விவரம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் பங்குகள் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் உலகின் ஆறாவது மிகப்பெரிய கச்சா எண்ணை நிறுவனமாக ரிலையன்ஸ் உருவெடுத்துள்ளது.
2019 ஆம் ஆண்டு படி சர்வதேச அளவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக அமெரிக்காவின் எக்ஸான் மொபில் நிறுவனம் திகழ்கிறது.இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 318.77 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
அடுத்ததாக பிரிட்டனை சேர்ந்த ராயல் டச் ஷெல் நிறுவனம் 257.72 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் செவ்ரான் நிறுவனம் 236. 63 பில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், 165.2 4 சந்தை மதிப்புடன் சீனாவின் பெட்ரோ சீன நிறுவனம் நான்காவது இடத்திலும், பிரான்ஸ் நாட்டின் டொட்டல் நிறுவனம் 142.59 பில்லியன் டாலர் மதிப்புடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
ஏழாவது இடத்தில் இருந்த இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் புதிய உச்சம் கண்டதால் அதன் சந்தை மதிப்பு 138 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே ஆறாவது இடத்தில் இருந்த பிரிட்டனின் பிரிட்டிஷ் எனர்ஜி 133 பில்லியன் டாலர் மதிப்புடன் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.





