நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணை..!
வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இங்கிலாந்தில் இருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இறக்குமதி வரி செலுத்திய நடிகர் விஜய் நுழைவு வரி விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நடிகர் இரண்டு வாரங்களில் வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
அதோடு வழக்கு தொடர்பாக ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நடிகர்கள் குறித்து சில கருத்துகளையும் தனி நீதிபதி தெரிவித்திருந்தார். நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தன்னைப் பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்க வேண்டும் என்றும் அபராதத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்.






