திருப்பூர் கல்வித்துறை ஊழலில் திடுக் திருப்பம்..கிளற கிளற பகீர் தகவல்கள்
பெரியளவில் எந்த கெட்ட பெயரை இதுவரை சந்திக்காத முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசுக்கு, கல்வித்துறையில் நடைபெறும் முறைகேடுகள், பெரும் அவப்பெயர் ஏற்படுத்துவதாக உள்ளது. கல்வித்துறையை, கல்லா கட்டும் துறையாக மாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை கடந்துவிட்டன. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சம்பவங்கள் தவிர, திமுக அரசு மீது மக்களுக்கு பெரியளவில் அதிருப்தி இல்லை. முதல்வர் ஸ்டாலினும், உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
கல்வித்துறையால் களங்கம்
ஆனால், இதற்கெல்லாம் திருஷ்டியாக, பள்ளிக் கல்வித்துறையில் பல லட்சக்கணக்கில் முறைகேடு நடப்பதாக, நமது குற்றம் குற்றமே இதழுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உண்மையென்ன கண்டறிய, களமிறங்கினோம். இதில் நமக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. இது தொடர்பாக, நமது நிருபர்கள் குழு திருப்பூரில் உள்ள சில பள்ளிகளில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில், பெயர் வெளியிட விரும்பாத பள்ளி ஆசிரியர்கள் பலரும் நம்மிடம் மனக்குமுறலை கொட்டித் தீர்த்தன.
எந்த ஆட்சி வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது என்பது, ஸ்டாலின் ஆட்சிக்கும் பொருந்திவிடும் போலிருக்கிறது. அந்தளவுக்கு பள்ளிக் கல்வித்துறையில் ஊழல் பெருச்சாளிகள் ஆட்டம் போடுவதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர். அரசு பள்ளிகளில், குடிநீர் சுத்திகரிக்கும் கருவி வாங்குவதில் தொடங்கி, பீரோ, மேசை, இருக்கை, தீயணைக்கும் கருவிகள் என்று, பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

சி இ ஓ வாய்மொழி உத்தரவு
சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளுக்கு பொருட்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வாடிக்கை. அந்த நிதியில், அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அடங்கிய பள்ளி வளர்ச்சி குழு, தங்கள் ஊரிலேயே தரமான பொருட்களை குறைவான விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். ஆனால், திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளுக்கு, சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தால் கட்டாயப்படுத்தி வாங்க வைக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
இதற்கு, திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், உடந்தையாக உள்ளதாகவும், அவர் மீது ஆதாரங்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர், தமிழக அரசு முதன்மைச் செயலர், தமிழக கல்வி அமைச்சர், தமிழக முதலமைச்சர் வரை புகார் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
திருப்பூரில் மையப்பகுதியில் உள்ள முன்னணி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் மூலம், சென்னையைச் சேர்ந்த ஜேகே அக்வா சொல்யூஷன் என்ற நிறுவனத்திடம் தான், பள்ளிக்கு பொருட்களை வாங்க வேண்டுமென்று, வாய்மொழியாக அரசு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்விக்கூடங்களில் கொள்ளையோ கொள்ளை
அந்த நிறுவனமோ, தரமற்ற பொருட்களை பள்ளிக்கு சப்ளை செய்துவிட்டு, கட்டாயப்படுத்தி காசோலையில் வாங்கி சென்றுள்ளனர். டேபிள், சேர், பீரோ போன்றவை, முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஏ.எஸ்.ஏ (A.S.A) ஸ்டீல் பர்னிச்சர் என்ற நிறுவனத்தில் வாங்கி, பல மடங்கு விலை வைத்து, அரசு பள்ளிகளுக்கு கொடுத்துள்ளனர்.
எஸ் டைப் சேர் ஒன்று, 2200 ரூபாய்க்கு வாங்கி, அதனுடன் 1189 ரூபாய் லாபம் வைத்து, 3390 ரூபாய்க்கு விற்றுள்ளனர். ஒரு டேபிள் 3250 ரூபாய்க்கு வாங்கி 5224 லாபம் வைத்து 8474 ரூபாய்க்கும், தரம் குறைந்த ஐந்தரை அடி பீரோவை 5750 ரூபாய்க்கு வாங்கி, 5267 ரூபாய் லாபம் வைத்து 11, 017 ரூபாய்க்கும் என, கொள்ளை லாபத்துடன் விற்பனை செய்துள்ளனர்.
இவர்களின் கொள்ளை லாபம் பார்க்கும் ஆசைக்கு அளவே இல்லை. தீயணைப்பு கருவிகளை, மகாராஷ்டிரா நிறுவனத்திடம் ஒன்றின் விலை 1,250 ரூபாய் என்ற விலைக்கு வாங்கி, ஜிஎஸ்டி 18 சதவீத வரி சேர்த்து 1,475 ரூபாய் சேர்த்து, கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் ஒன்றின் விலை ரூ. 5508 என்று விற்று கமிஷன் பார்த்து வருகின்றனர். தண்ணீர் சுத்திகரிப்பு கருவி, மிக மட்டமாக உள்ளதென குற்றச்சாட்டு உள்ளது. அதே பொருள், உள்ளூரில் சுமார் 6500 ரூபாய் இருக்கும். வரி, கமிஷன் என்று சேர்த்து, 53, 500 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர் என்றால், இதில் யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் போயிருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
திருடன் கையில் சாவி தரலாமா?

இந்த விவகாரம் பற்றி கேள்வி எழுப்பினால், சி இ ஓ குடைச்சல் கொடுப்பாரோ, சிக்கல்கள் வருமோ என்ற கவலையில், அரசு பள்ளிகளில் உள்ள பல ஆசிரியர்களும் வெளியே சொல்ல தயங்கி, வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றனர். இதற்கெல்லாம், திருப்பூர் முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் என்ன பதிலை சொல்லப் போகிறார் என்று, நம்மிடம் பேசிய அந்த ஆசிரியர் ஆதங்கத்தோடு கேள்வி எழுப்பினார்.
இந்த முறைகேடு புகார் பற்றி சென்றுள்ள நிலையில், அதை விசாரிக்க, புகாருக்குள்ளான அதே முதன்மை கல்வி அதிகாரியிடம் விசாரிக்க சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. பெயரளவுக்கு இப்படி விசாரணை நடப்பது, இது என்ன வகையில் நியாயம் என்று தெரியவில்லை. திருடன் கையில் சாவி கொடுத்தது போல் இருக்கிறது. இதில் என்ன உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று தெரியவில்லை.
தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், அவருக்கு கீழே துடிப்புடன் பணியாற்றி வரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக கல்வித்துறையில் நடக்கும் முறைகேடுகள் உள்ளன. ஊழலை ஒழிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் முழங்கி வரும் நிலையில், கல்வித்துறையில் கமிஷன் பார்த்து, கல்லா கட்டி வரும் ஊழல் பெருச்சாளிகள் மீது, அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; உடந்தையாக உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தொகையை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதே கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

“சி இ ஓ என்ன சொன்னாலும் செய்வார்… ”
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும், பல மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றப்பட்டனர். ஆனால், திருப்பூர் சி.இ.ஓ. ரமேஷ் இன்னமும் அப்பதவியை தொடர்கிறார். இதற்கு ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரின் ஆசி இருப்பதாக சொல்கிறார்கள்.
திருப்பூர் காதர்பேட்டையை சேர்ந்த ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர், இன்னொருவரிடம் தொலைபேசியில் பேசும்போது, சி இ ஓ ரமேஷை மாற்றாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று, அமைச்சர் பொய்யாமொழியிடம் சொல்லிவிட்டேன். திருப்பூர் சி இ ஓ ஆக இருப்பவர், நான் என்ன சொன்னாலும் செய்வார் என்று கூறும் உரையாடல், நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. திருப்பூரில் ‘பசை’ இருப்பதால் தான், ரமேஷ் இங்கு ஒட்டிக் கொண்டிருக்கிறாரோ என்று ஆசிரியர்கள் மத்தியில் பேச்சு உலா வருகிறது.
திமுக பிரமுகர் தலையீடு..
திருப்பூர் கல்வித்துறை ஊழலில் புது திருப்பமாக திமுக பிரமுகரின் தலையீடு குறித்து வெளியான பிரத்யேக ஆடியோ, வீடியோக்களுடன் வரும் இதழில்….






