விஜய் ரசிகர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்கும் கைகலப்பு..!
சிதம்பரத்தில் பீஸ்ட் திரைப்படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த ரசிகர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்டு திரைப்படம் நேற்று வெளியானது.
திரைப்படத்தை காண திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கில் மூன்று மணி காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பொதுமக்கள் திரைப்படம் பார்க்க வந்திருந்தனர்.
ரசிகர்களான நண்பர்கள் 8 பேர் மது போதையில் திரைப்படம் பார்க்க வந்ததாக கூறப்படுகிறது. திரையரங்கு ஊழியர்கள் அவர்களை தடுத்ததால் விஜய் ரசிகர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதில் விஜய் ரசிகரின் மூக்கில் ரத்தம் வழிந்தது. திரையரங்கில் போலீசார் இருந்த நிலையில் திரையரங்கு ஊழியர்களும், விஜய் ரசிகர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





