கொரொனாவால் தாய் உயிரிழந்ததால் தவிக்கும் 5 பிள்ளைகள்..!
கிருஷ்ணகிரி அருகே கொரொனா தொற்றால் தாய் உயிரிழந்த நிலையில் நிமோனியா என சான்றிதழ் கடிதம் வழங்கப்பட்டதால் அவரது நான்கு பெண் பிள்ளைகள் உட்பட 5 பேர் அரசின் உதவியை பெற முடியாமல் தவிக்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணாநகரில் கணவனை இழந்த பெண் ஒருவர் பெட்டிக்கடையில் பலகாரம் விற்று நான்கு பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை என ஐந்து பேரை வளர்த்து வந்தார். இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவ பலனின்றி உயிரிழந்தார்.
ஆனால் நிமோனியா எனக் குறிப்பிட்டு தனியார் மருத்துவமனை இறப்பு சான்றிதழ் கடிதம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் 18 வயதை கடந்த மூன்று பெண்கள், 16 வயதில் ஒரு சிறுமி, 15 வயதில் ஒரு சிறுவன் என ஐந்து பேர் ஆதரவு இன்றி தவித்து வருகின்றனர்.
ஒரு பெண் மட்டும் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருவதாகவும் வாடகை வீட்டில் இருப்பதால் பல சிக்கல்களை எதிர்கொள்வதும் கண்ணீருடன் கூறுகின்றனர்.
தாயின் இறப்பு சான்றிதழில் கொரொனா என குறிப்பிடாததால் அரசின் உதவி கிடைக்க முடியாமல் தவித்து வருவதாகவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.







