கொரொனா பாதித்த மனைவியை குளியலறையிலே தங்க வைத்த கணவர்..!
தெலுங்கானாவில் கொரொனா பாதித்த மனைவியை வீட்டிற்கு வெளியே உள்ள குளியலறையில் 5 நாட்களாக தங்க வைத்திருந்த கணவருக்கு அறிவுரை கூறி அவரது மனைவியை போலீசார் மீட்டனர். தெலுங்கானாவில் ஒரு தம்பதியில் மனைவிக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து மனைவியை வீட்டிற்குள் வரக்கூடாது எனக் கூறி வெளியே உள்ள சிறிய அளவிலான குளியல் அறையில் தங்க வைத்தார். அவருக்கு போதிய உணவை கூட வழங்காமலும் கழிவறைக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
அவர் படும் அவதியை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கணவருக்கு கொரொனா விழிப்புணர்வு ஆலோசனை வழங்கி மனைவியை வீட்டிலுள்ள தனியறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
கொரொனா பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமே தவிர புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.






