--- --:--:-- --

வாக்குச்சாவடி முன்பு தோப்பு வெங்கடாச்சலம் தர்ணா – பரபரப்பு

thoppu venkatachalam

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரிசையை மாற்றி வைத்ததாக குற்றம்சாட்டி, சிட்டிங் எம்.எல்.ஏவும் சுயேச்சை வேட்பாளருமான தோப்பு வெங்கடாசலம் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் 11 மணி நிலவரப்படி 26.29 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் தங்கள் ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஒருசில இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது, தொழில்நுட்பச்சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவுகள் தாமதமாகின.

 

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரிசையை மாற்றி வைத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து, தற்போதைய அதிமுக எம்.எல்.ஏவும் – அங்கு சுயேச்சையாக போட்டியிடுபவருமான அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.

 

அத்துடன், இதுகுறித்து விளக்கம் கேட்டும், வாக்குப்பதிவை நிறுத்த வலியுறுத்தியும் ஆதரவாளர்களுடன் வாக்குச்சாவடி முன்பாக தோப்பு வெங்கடாச்சலம்தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரும், அதிகாரிகளும் தோப்பு வெங்கடாசலத்தை சமாதானம் செய்து அனுப்பினர். அதன் பிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

 

இதேபோல், விருதுநகர் மாவட்டம் சத்திரியபள்ளி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும், ஒரு குறிப்பிட்ட கட்சியின் சின்னம் பதிவாவதாக புகார் எழுந்தது. இதுபற்றி தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி அங்கு தற்காலிகமாக வாக்குப்பதிவை நிறுத்தினர்.

Leave a Reply

Right Menu Icon