தேர்தல் ஆணைய நடவடிக்கை திருப்தியா? வாக்களித்த பின் ஸ்டாலின் கருத்து
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்தி என்றோ திருப்தி இல்லை என்றோ சொல்ல முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலி தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி உள்ளிட்டோருடன் சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி: எங்களது ஜனநாயகக் கடமையை நாங்கள் ஆற்றி இருக்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் மக்கள், அமைதியாக, ஆர்வத்துடன் வாக்களித்துக் கொண்டிருப்பதாக எனக்குச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஜனநாயகக் கடமையை மக்கள் முறையாக ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனுடைய முடிவு மே 2 ஆம் தேதி சிறப்பாக இருக்கும். அது உறுதி.
மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருவது, ஆளும் கட்சிக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதை நான் தெளிவாக உணர்கிறேன். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்தி என்றும் சொல்ல முடியாது. அதிருப்தி என்றும் சொல்ல முடியாது.
ஆளும்கட்சியின் தூண்டுதல் மற்றும் தோல்வி பயம் வந்துவிட்டதால், எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் சில இடங்களில் தேர்தலை நடத்தக்கூடாது என்று அவர்கள் முறையிட்டுள்ளனர். அதற்குத் தேர்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை என்ற செய்தியும் தொடர்ந்து கிடைத்தது.
பல இடங்களில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகப் புகார்கள் வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையம்தான் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதையெல்லாம் மீறி நிச்சயம் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.






