ஸ்டாலின்தான் இந்தியாவின் பிரதமர்! துரைமுருகன் பரபரப்பு பேச்சு!!
அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மு.க. ஸ்டாலின் இந்தியாவின் பிரதமர் ஆகிவிடுவார் என்று, தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசினார்.
வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு ஒருவாரம் கூட இல்லாததால் இறுதிகட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் பிரசாரம் செய்து வருகிறார்.
அவ்வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர்கள் செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி) , மதியழகன் (பர்கூர்) ஆகியோரை ஆதரித்து, துரைமுருகன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசியதாவது:

எந்த கட்சியில் நீங்கள் இருந்தாலும் நீங்கள் தமிழன்தான். எனவே தமிழை காப்பாற்றப் போகின்ற கட்சிக்கு நீங்கள் வாக்களி வேண்டும். நான் இப்போது கூறுகிறேன், நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே முதல்வராக இருப்பார். அதன்பின்னர் அவர் பிரதமராகி விடுவார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘ஒரே நாடு, மொழி, இனம்’ என்ற முழக்கத்தை உருவாக்கி வருகிறது. நாட்டில் பல்வேறு இனம், மொழிகள், கலாச்சாரம், கடவுள் வழிபாடு உண்டு. அவற்றை அழிக்க மாபெரும் சூழ்ச்சி நடக்கிறது. அந்த சூழ்ச்சியை முறியடிக்க, மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக வரவேண்டும்.
மத்திய அரசை எதிர்ப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை கருணாநிதியிடம் இருந்து பெற்றவர்தான் மு.க. ஸ்டாலின். கருணாநிதியைப்போல மத்திய அரசை எதிர்த்தவர்கள் யாரும் இருக்க முடியாது. எதிர்க்கும் இரும்பு இதயம் கொண்டவர் ஸ்டாலின் என்பதால் அப்படிப்பட்ட ஒரு முதல்வர் தமிழகத்தில் அமர்ந்தால்தான் கலாச்சார படையெடுப்பை தடுக்க முடியும் என்று துரைமுருகன் பேசினார்.





