--- --:--:-- --

திருப்பூரில் மெட்ரோ ரயில் ஓடும்… உறுதி தருகிறார் குணசேகரன் எம்.எல்.ஏ!!

vijayakumar MLA TPR

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், திருப்பூருக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படும் என்று, திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளரான சிட்டிங் எம்.எல்.ஏ. குணசேகரன் வாக்குறுதி அளித்துள்ளார்.

 

வரும் சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக குணசேகரன் எம்.எல்.ஏ. மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். வடக்கு தொகுதியில் எம்.எல்.ஏ. விஜயகுமார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து உற்சாகமான எம்.எல்.ஏ. குணசேகரன், தனது ஆதரவாளர்களும், அதே வேகத்தில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.

 

அமாவாசை நாள் பார்த்து திருப்பூரில் உள்ள கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து, குணசேகரன் எம்.எல்.ஏ, விஜயகுமார் எம்.எல்.ஏ. இருவரும் ஆதரவு திரட்டினார். காந்தி நகரில் உள்ள மூப்பனார் பவனுக்கு சென்ற இருவரும், த.மா.கா., அலுவலகத்தில், நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டனர். அத்துடன், தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இருவரையும், த.மா.கா மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் வரவேற்றார்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய தெற்கு தொகுதி வேட்பாளர் குணசேகரன், கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழக அரசு திருப்பூருக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. திருப்பூரில் மருத்துவக்கல்லூரியை அதிமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள், திருப்பூரில் நடைபெற்று வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்ட், நான்காவது குடிநீர் திட்டம், யாரும் நிறைவேற்றித் தராத அத்திக்கடவு அவிநாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அதிமுக ஆட்சி காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு, தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்துள்ளது. இதையெல்லாம் நாம் வாக்காளர்களிடம் மறக்காமல் சொல்லி, வாக்கு சேகரிக்க வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், சென்னையை போல் திருப்பூரில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர, முதல்வரிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு குணசேகரன் பேசினார்.

 

இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க நிர்வாகிகள் ஜான், ராதாகிருஷ்ணன், அன்பகம் திருப்பதி, கருணாகரன், சடையப்பன், மற்றும் த.மா.கா. நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon