--- --:--:-- --

எப்படியிருந்த தேமுதிக இப்படி ஆயிடுச்சே! தனித்து நிற்க தயக்கம்… மீண்டும் அமமுகவுக்கு தூது!

vijayakanth ttv

தனித்து நின்றால் கட்சியே கரைந்துவிடும் என்று அஞ்சும் தேமுதிக தலைவர்கள், சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக டிடிவி தினகரனின் அமமுகவுக்கு மீண்டும் தூது விட்டுள்ளனர். இரு கட்சி நிர்வாகிகள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 

தமிழக சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்படும் வரை அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு, தொகுதிப் பங்கீடு விஷயத்தில் அதிமுகவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிமுகவிடம் 41 தொகுதிகளை தேமுதிக கேட்டது. அதிமுக மறுக்கவே, கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்த தேமுதிக, பா.ம.க.வுக்கு இணையாக 23 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கியது.

 

 

ஆனால், 2 சதவீத ஓட்டுகள் கூட இல்லாத கட்சிக்கு 13 இடங்களுக்கு மேல் இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் அதிருப்தியடைந்த தேமுதிக மூத்த தலைவர்கள் பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டோர் கூடி ஆலோசனை செய்து, இறுதியில் கடந்த 9ம் தேதி அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுவதாக அறிவித்தனர்.

 

 

அதன் பின்னர், அதிமுகவை வாய்க்கு வந்தபடி தேமுதிக தலைவர்கள் வசைபாடினார். இன்று தான் எங்களுக்கு தீபாவளி என்று எல்.கே. சுதீஷ் உணர்ச்சிவசப்பட்டு பேசினர். விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனோ, அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மண்ணைக் கவ்வும் என்று கொந்தளித்தார். ஆனால், அவசரப்பட்டு முடிவெடுத்த தேமுதிகவை வரவேற்க, கூட்டணி சேர்க்க எந்த கட்சியும் தயாராக இல்லை.

 

 

எனினும், டிடிவி தினகரனின் அமமுகவுடன் வலியச் சென்று தேமுதிக நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். ஆனால் அதில் உடனடியாக உடன்பாடு ஏற்படவில்லை. கூடுதல் தொகுதிகளை தே.மு.தி.க. கேட்டதுடன் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்ததால் கூட்டணி பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

 

வேறுவழியில்லாமம் திக்குத்தெரியாமல் முழித்த தேமுதிக தலைவர்கள், தனித்து போட்டியிட ஆயத்தமானார்கள். ஆனால், மாவட்டச் செயலாளர்கள் பலரும் தனித்து போட்டியிடுவதில் விருப்பம் இல்லை என்றனர். தனித்துப் போட்டியிட்டால் கட்சியின் வாக்கு சதவீதம் வெளிப்பட்டு, மேலும் கரைந்துவிடும் என்று பலரும் அஞ்சினார்கள்.

 

கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கருதியே விருப்ப மனுக்களை தாக்கல் செய்தோம் என்றும், தனித்து களம் இறங்கினால் நாங்கள் போட்டியிட விரும்பவில்லை என்று, தேமுதிக நிர்வாகிகள் திட்டவட்டமாகக்கூற, தேமுதிக தலைவர்களுக்கு தலைசுற்றலே வந்துவிட்டது.

 

வேட்புமனு தாக்கலும் தொடங்கிவிட்டது; தனித்துப் போட்டியிட்டால் கட்சி காணாமல் போய்விடும்; போட்டியிடாவிட்டால் அதுவும் பரிகாசத்திற்கு உள்ளாகிவிடும் என்று தேமுதிக தலைவர்கள், வேறுவழியில்லாமல் மீண்டும் அ.ம.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தேமுதிக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

 

 

தே.மு.தி.க. கூட்டணிக்கு வந்தால் சில இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதற்காகத்தான், அ.ம.மு.க.வும் இதுவரை 50 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தினகரனின் அ.ம.மு.க. கூட்டணியில் ஏற்கனவே எஸ்.டி.பி.ஐ. மற்றும் ஓவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

எனவே டிடிவியுடன் இணைந்து போட்டியிட்டு, ஜெயிக்காவிட்டாலும் அட்லீஸ்ட் செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் கவுரவமான ஓட்டுகளையாவது பெறலாம் என்பதுதான் தேமுதிக போடும் கணக்கு. ஒரு காலத்தில் எப்படியிருந்த தேமுதிக, இப்படியாகிவிட்டதே என்று உண்மையாக தேமுதிக விசுவாசிகள் வேதனையோடு புலம்புகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon