கூட்டணியை அறிவித்தார் தினகரன்! ஓவைசி கட்சியுடன் அமமுக கூட்டணி!!
தமிழக சட்டசபைத் தேர்தலில் மற்றொரு திருப்பமாக, டிடிவி தினகரனின் அமமுகவும், அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
அ.ம.மு.க சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், மார்ச் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என அக்கட்சியின் சார்பில் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் தேதி ஏப்ரல் 6-ம் தேதி என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால், 7-ம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, 4,500 பேருக்கு மேல் விருப்ப மனு அளித்திருந்தனர்.
அ.ம.மு.க வேட்பாளர் நேர்காணல், தற்போது சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்துவருகிறது. இன்றும் நாளையும் நேர்காணல் நடத்தப்பட்டு, வரும் புதன்கிழமை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார். இந்த நேர்காணலில் டி.டி.வி தினகரனுடன் அந்தக் கட்சியின் துணைத்தலைவர் அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர்கள், ரெங்கசாமி, பழனியப்பன், செந்தமிழன், அரூர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனிடையே, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் சுருக்கமாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தமிழகத்தில் போட்டியிடுவதாக அறிவித்தது. தற்போது அக்கட்சி, டிடிவி தினகரனின் அமமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, முதல்கட்டமாக தமிழகத்தில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மற்றும் சங்கராபுரம் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் அமமுகவுடன் இணைந்து ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஐதராபாத் எம்பி ஒவைசியின் கட்சிக்கு பட்டம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




