அதிமுக அணிக்கே வெற்றி! தமிழகம் வந்த அமித்ஷா நம்பிக்கை
அதிமுக – பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். சுசீந்திரத்தில் வீடுவீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அதிமுக – பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வந்தடைந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவிலுக்கு வந்த அமித்ஷா, பின்னர் சுசீந்திரத்தில் உள்ள புகழ்பெற்ற தானுமாலயர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதை தொடர்ந்து, குமரி மக்களவை இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன். ராதாகிருஷ்ணனுக்கு, சுசீந்திரத்தில் வீடு வீடாகச் சென்று அமித்ஷா வாக்கு சேகரித்தார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தை அவர் வழங்கினார். பிறகு ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’ என்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அமித்ஷா அடுத்து, நாகர்கோவில் இந்து கல்லூரி சந்திப்பு முன்பிருந்து ரோடு ஷோ மூலம், பாஜகவுக்கு ஆதரவாக அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் நின்றபடி சாலைகளில் சென்றவாறே அமித்ஷா வாக்கு சேகரித்தார்.இந்த பிரச்சாரம் செட்டிகுளம் வழியாக வேப்பமூடு சந்திப்பை அடைந்தது. அங்கு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அமித் ஷா மரியாதை செலுத்தினார்.
பிற்பகல் 12.30 மணியளவில் வடசேரி உடுப்பி ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். குமரி மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு, தொகுதி நிலவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அமிஷா, வரும் சட்டசபைத் தேர்தலில், அதிமுக – பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் தேர்தல் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ வேண்டும். பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி லோக்சபா தொகுதி மக்கள், பார்லிமென்டிற்கு அனுப்ப வேண்டும் என்றார். நாகர்கோவில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, மதியம் 2 மணியளவில் திருவனந்தபுரத்திற்கு அமைச்சர் அமித்ஷா புறப்பட்டு செல்கிறார்.
அதிமுக கூட்டணியில், குமரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது; அங்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் இத்தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






