--- --:--:-- --

திமுக கூட்டணி தொடருமா? விசிக தலைவர் திருமாவளவன் பளிச் பதில்!

Thiruma 02

தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் கருத்து வேறுபாடு தோன்றியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணிக்கும் என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 இடங்களில் போட்டியிட்டது. இம்முறையும், அதே எண்ணிக்கையில் தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நினைக்கிறது. எனவே, திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு தொடங்கிய போது, இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று, திருமாவளவன் கேட்டார்.

 

தி.மு.க. தலைவர்களோ, அதை ஏற்கவில்லை. விசிகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என்று கறாராக சொல்லி்விட்டனர். இதனால், முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. ஆனால், இரண்டு நாளில் நல்ல தகவல் வரும் என்று கூறி திருமாவளவன் சமாளித்தார்.

 

இதற்கிடையே, திமுக – விசிக இடையே மீண்டும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்கு நேற்று திமுக தலைமை ஏற்பாடு செய்தது. ஆனால், ஏமாற்றத்தில் இருந்த விசிக தரப்பில் இருந்து, இதில் யாரும் கலந்து கொள்ளவில்லை. குறைந்தபட்சம் 8 தொகுதிகளாவது வேண்டும் என்று விசிக கோரி வருவதாகவும், திமுக 5 என்ற எண்ணிக்கைக்கு மேல் விட்டுத்தரவில்லை என்பதால், பேச்சுவார்த்தையை விசிக புறக்கணித்ததாக செய்திகள் வெளியாகின.

 

இதனால், திமுக கூட்டணியில் விசிக தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது. காரணம், திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளும் குறைந்த தொகுதி ஒதுக்க திமுக முன்வந்ததால் கடும் அதிருப்தியில் அடுத்த கட்ட ஆலோசனைக்கு ஏற்பாடு செய்திருந்தன. இம்மூன்று கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியும் திமுகவின் ‘பெரியண்ணன்’போக்கால் கோபத்தில் இருந்தது.

 

இந்நிலையில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு இழுபறி தொடர்பாக, சென்னை அசோக்நகர் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில், திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விசிக புறக்கணிக்கவில்லை என்றார்.

 

மேலும், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து பயணிக்கும். மூன்றாவது அணியில் விசிக இணைந்து பயணிக்க வாய்ப்பு உள்ளதா என்பது, இப்போதைக்கு பொருத்தமற்ற கேள்வி என்று திருமாவளவன் கூறினார். சசிகலாவின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், பாஜகவின் நெருக்கடியால் சசிகலா அரசியலில் இருந்து விலக முடிவு எடுத்திருக்கலாம் என்றார்.

Leave a Reply

Right Menu Icon