மாணவியருடன் டான்ஸ், தண்டால்…! ஹாயாக பிரசாரம் செய்யும் ராகுல்
கன்னியாகுமரியில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, பிரசார மேடையில் மாணைவியருடன் டான்ஸ் ஆடினார்; அதேபோல் தண்டால் எடுத்துக்காட்டி கூட்டத்தினரை குஷிப்படுத்தினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவுக்கு குறுகிய கால அவகாசமே உள்ளது. இதனால், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 3 நாட்களாக தென் மாவட்டங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மற்ற தேசியத் தலைவர்களை போல் அல்லாமல், ராகுலின் பிரசாரம் மாறுபட்ட முறையில், எளிமையாக உள்ளது.
வேனில் ஹாயாக அமர்ந்தபடி, மைக் பிடித்து பேசுகிறார். போகும் வழியின் தென்படும் கடையில் அமர்ந்து டீ சாப்பிடுகிறார்; தெருவோர தள்ளுவண்டியில் நுங்கு வாங்கி உண்பது என, எந்த பந்தாவும், பாதுகாப்பு கெடுபிடிகளும் இல்லாமல் ராகுல் பழகுகிறார். தூத்துக்குடியில் உப்பளத்திற்கு சென்று உப்பு சேகரித்தார். இது, கட்சி வேறுபாடுகளை கடந்து, சாமானிய மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரசார பயணத்தின் போது, சர்ச் ஒன்றிற்குக்கு சென்று அங்கு மண்டியிட்டு பிரார்த்தனை செய்த ராகுல், பின்னர் நெல்லையப்பர் கோவிலிலும் வழிபாடு நடத்தினார்.

இந்நிலையில், ராகுலின் தென் மாவட்ட பயணத்தின் கடைசி நாளான இன்று கன்னியாகுமரியில் ராகுல் தேர்தல் பிரசாரம் செய்தார். கன்னியாகுமரியில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மாணவர்களை குஷிப்படுத்தினார். ராகுலுடன் கைகோர்த்திருந்த கே.எஸ். அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் நடனமாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை மாணவர்கள் கைத்தட்டி உற்சாகமூட்டி ரசித்தனர். அதே பள்ளியில், தண்டால் எடுத்துக்காட்டி மாணவர்களை ராகுல் அசத்தினார்.
சில தினங்களுக்கு முன்பு, கேரளாவில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, மீனவர்களுடன் மீன் பிடித்ததுடன், திடீரென கடலில் இறங்கி குளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரது மாறுபட்ட இந்த வித்தியாசமான அணுகுமுறை, கட்சியை கடந்து பலரையும் ஈர்த்துள்ளது.





