எந்த பக்கம் போவது? காங்கிரஸ், தேமுதிகவினர் சோகம்! 3வது அணி அமைப்பதில் ஆர்வம்!!
அதிமுகவில் நீடிக்கலாமா, அல்லது மூன்றாவது அணி அமைக்கலாமா என்று தேமுதிக குழப்பத்தில் உள்ளது. திமுகவின் செயல்பாட்டால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் மூன்றாவது அணி ஆசை வந்துள்ளது. கமல்ஹாசனுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்புகள் பற்றி ஆலோசனை நடப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் சூழலில், தேர்தலில் யாருடன் யார் கூட்டணி என்ற அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கூட்டணியில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. அதிமுகவுடன் கூட்டணியை பாஜக ஏற்கனவே உறுதி செய்துவிட்டது; தொகுதிப் பங்கீடு பற்றி பேச, அக்கட்சி டெல்லி தலைவர்கள் அடுத்த வாரம் சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக அணியில் பாமக!
அடுத்ததாக, சாதாரணமுறையில் கூட்டணி பேச்சுவார்த்தைகளை, பாமகவும் தொடங்கி இருக்கிறது. அதிமுக தரப்பில் பாமக தலைவர்களுடன் அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். எனவே, அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, ஜி.கே. வாசனின் தமாகா உள்ளிட்டவை இடம் பெறுவது உறுதியாகிவிட்டது. இதில், பாமக 40 தொகுதிகளை கேட்பதாகவும், அதற்கு அதிமுக உடன்படவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்புவரை, திமுக அணிக்கு பாமக தாவிவிடுமோ என்ற சந்தேகம், அதிமுகவுக்கு இருந்தது. ஆனால்,ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மீதான திமுகவின் கடுமையான விமர்சனங்கள், பாமகவிற்கான கதவை திமுக மூடிவிட்டதையே காட்டியது. எனவே, பாமகவுக்கு இப்போது அதிமுகவை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலை. இதை பயன்படுத்திக் கொண்டு, அக்கட்சிக்கு 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கவும், தேர்தல் செலவையும் அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும், அதிமுக தரப்பு சொல்லி வருகிறது.
பாமக – அதிமுக இடையே இன்னமும் கூட்டணி உறுதி செய்யப்படாவிட்டாலும், இரு கட்சிகளின் கூட்டணி தொடர்வது உறுதியாகிவிட்டது. அனேகமாக இன்றோ, நாளையோ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து, கூட்டணியை உறுதி செய்வார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
குழப்பத்தில் தேமுதிக!
ஆனால், அதிமுக அணியில் இதுவரை இடம் பெற்றுள்ள தேமுதிகவின் நிலைதான் இன்னமும் ஊசலாட்டமாகவே உள்ளது. அதிமுக அணியில் தங்களுக்கு 40 தொகுதிகள் தேவை என்று தேமுதிக மல்லுக்கட்டுகிறது. அதேநேரம், மூன்றாவது அணி அமைப்போம், அனைத்து தொகுதிகளிலும் தனித்து நிற்போம் என்று விஜயகாந்த் மகன் பிரபாகரன் முழங்கி வருகிறார். இன்னொருபக்கம், சசிகலாவை ஆதரித்து வெளிப்படையாகவே பிரேமலதா பேசுவது,அதிமுக தலைமைக்கு எரிச்சலை தந்து வருகிறது. தேமுதிகவும் அதிமுக அணியில் எந்தவித பிடிப்பும் இல்லாமல் ஒட்டிக் கொண்டிருப்பதையே, அதன் செயல்பாடுகள் காட்டுகிறது.
திமுக பக்கம் செல்லலாம் என்றால், அங்கு ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை கிள்ளித் தருவார்கள் என்பதால், அங்கு செல்லவும் தேமுதிக தலைவர்கள் விரும்பவில்லை. எனவே, கவுரவமான இடங்களை அதிமுக தராவிட்டால், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி கமல்ஹாசன் + சரத்குமார் ஆகியோருடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கலாமா என்று தேமுதிக தலைமை யோசித்து வருகிறதாம்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும், வலுவான மூன்றாவது அணி அமைக்க முயன்று வருகிறார். தேர்தல் கூட்டணி வியூகம் பற்றி ஆலோசிக்க, அந்த கட்சியின் பொதுக்குழு கூட்டம், பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதன் முடிவில் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதிமுகவுடன் இதுவரை நட்பு பாராட்டி வரும் சரத்குமார், இந்த முறை தேர்தலில் 2- 3 சீட்டுகளை பெற நாங்கள் தயாராக இல்லை என்று, ஆரம்பம் முதலே கூறி வருகிறார். எனவே, அவரும் அதிமுக கூட்டணியில் இடம் பெறுவது சந்தேகம் என்று தெரிகிறது. மார்ச் 3ம் தேதி முடிவை அறிவிப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். எனவே, அதிமுக கூட்டணியில் இருந்து, தேமுதிக, சமக வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
3வது அணியில் காங்கிரஸ்?

மறுபுறம், திமுக கூட்டணியிலும் சலசலப்பு இருந்து வருகிறது. குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதில் திமுக உறுதியாக உள்ளது. இதன் காரணமாக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 15 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 , இந்திய கம்யூனிஸ்ட் 4, ம.தி.மு.க – 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி -2 , முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்திருக்கிறதாம்.
தங்களுக்கு வெறும் 15 தொகுதிகள் என்ற உறுதி செய்யப்படாத தகவலை கேட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், அதிர்ந்து போயுள்ளார்கள். அண்மையில் தமிழகம் வந்தபோது ராகுல் காந்திக்கு கிடைத்த உற்சாக வரவேற்பை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 30 இடங்களாவது தேவை என்பது, அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
அதற்கு திமுக இணங்காவிட்டால், பேசாமல் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், விஜயகாந்தின் தேமுதிக, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மூன்றாவது அணி அமைக்கலாமா என்று தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரகசியமாக ஆலோசிக்க தொடங்கி இருக்கிறார்களாம்.
வரும் 14ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி பிரசாரம் செய்யவுள்ளார். அதற்குள் கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமையிடம் இருந்து சாதகமான சிக்னல் கிடைக்காவிட்டால், ராகுலிடம் ஆலோசித்து 3வது அணி அமைக்கலாமா என்ற யோசனையும் உள்ளதாக, கதர்சட்டை பிரமுகர்கள் தெரிவித்தனர். அரசியலில் நிரந்த எதிரியும் இல்லை- நண்பரும் இல்லை. எனவே எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். தமிழகத்தில் அரசியல் களத்தில் நிலவும் கூட்டணி குழப்பங்களுக்கு ஓரிரு வாரங்களில் தெளிவு பிறக்கும் என்று நம்பலாம்.







