பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் அளித்துள்ள வாக்குமூலம்..!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏற்கனவே நான்கு பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வந்த நிலையில் மேலும் ஒரு பெண் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் வசந்த் குமார், சபரிராஜன் சதீஷ், திருநாவுக்கரசு, மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறை நடத்திய விசாரணையில் அவர்கள் பல இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் தற்போது விசாரணை கைதிகளாக உள்ள நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், ஹேரன்பால் பாபு ஆகிய 3 பேரை அண்மையில் கைது செய்திருந்த நிலையில் ஏற்கனவே ஆசிரியர் உட்பட நான்கு பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.






