விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று ஒன்பதாவது முறையாக பேச்சுவார்த்தை..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று ஒன்பதாவது முறையாக பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 50 நாட்களாக விவசாய அமைப்புகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுடன் மத்திய அரசு எட்டுமுறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 9வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. முன்னதாக விவசாயிகள் பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது குழுவில் இடம் பெற்றிருந்த பாரதிய கிசான் சங்கம் தலைவர் பூபேந்தர் சிங் மான் திடீரென விலகியுள்ளார்.
எப்போதும் விவசாயிகள் பக்கமே இருக்க தான் விரும்புவதாகவும் எனவே உச்சநீதிமன்ற குழுவில் இருந்து விலகி கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம் என உறுதியான நிலைப்பாட்டில் உள்ள விவசாயிகள் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.
அதே நேரத்தில் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழு முன்பு ஆஜராக மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவது தொடர்பாக விவசாய சங்கங்கள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
ஒரு பிரிவினர் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என தெரிவித்துள்ள நிலையில் மற்றொரு பிரிவினர் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க சதி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆளுநர் மாளிகை கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுகிறது. நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.







